குவாரி குட்டையில் மூழ்கி இறந்த உடுமலை மாணவர் உடல் தகனம்

3717பார்த்தது
குவாரி குட்டையில் மூழ்கி இறந்த உடுமலை மாணவர் உடல் தகனம்
உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட வி.வி லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் எம்.பி. அய்யப்பன். இவர் கேஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகன் தீபக்சாரதி(20). சென்னை அருகே உள்ள பெத்தேரியில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். மே தினத்தன்று தீபக்சாரதி தனது நண்பர்களான முகமது இஸ்மாயில், விஜய்சாரதி, அப்துல் பாசித், சூர்யா ஆகியோருடன் வண்டலூர் அருகே கீரப்பாக்கத்தில் உள்ள கல்குவாரி குட்டையில் குளிக்க சென்றனர். அப்போது தீபக்சாரதி, முகமது இஸ்மாயில், விஜய் சாரதி ஆகியோர் ஆழமான பகுதிக்கு சென்றதால் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். இவர்களது உடல் நீண்ட போராட்டத்துக்கு பின்பு தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அய்யப்பன் மகன் தீபக் சாரதி உடல் நேற்று இரவு உடுமலைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பொதுமக்கள், உடுமலை அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்கள் கேஸ் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் தீபக் சாரதியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் தீபக் சாரதியின் உடல் உடுமலையில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி