திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடங்கியது. இந்த பயிற்சி வகுப்பை கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து கலெக்டர் கூறும்போது “கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற பயிற்சி வகுப்புகளின் வாயிலாக டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வில் 12 மாணவர்களும், தொகுதி 2 மற்றும் 2ஏ தேர்வில் 11 மாணவர்களும் தேர்ச்சி பெற்று அரசுப் பணி வாய்ப்பு பெற்றுள்ளனர். முதன்மைத் தேர்வுக்கு தயாராகும் பட்டதாரி மாணவர்கள் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெற நேரிலோ அல்லது 0421-2999152, 9499055944 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
கடந்த ஏப்ரலில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். இதில் கோவை மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) ஜோதிமணி, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி சுரேஷ் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.