திருப்பூர் மாநகரில் இந்து முன்னணி சார்பில் அறநூறு இடங்களில் கடந்த ஏழாம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நான்காம் நாளான இன்று(செப்.10) விநாயகர் சிலைகள் அனைத்தும் திருப்பூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. மத்திய இணை அமைச்சர் எல். முருகன் விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
ஊர்வலம் திருப்பூர் மாநகரின் முக்கிய பகுதிகளான டவுன்ஹால் வழியாக ஆலங்காடு பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதியை சென்றடைந்தது. கோலாகலமாக ஊர்வலம் நடைபெற்றது. 15 அடிக்கு மேலான விநாயகர், கையில் விநாயகர் முருகனை சுமந்த சிவபெருமானின் ருத்ர தாண்டவ சிலை அனுமார் சிலை நரசிம்மன் அவதாரம் சிலை காளிதேவி உள்ளிட்டோர் சிலைகள், இந்த விசர்ஜன ஊர்வலத்தில் இடம் பெற்று இருந்தது.
ஆலங்காடு பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு பின்னர் மாநகரின் மூன்று பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 600 விநாயகர் சிலைகள் மங்கலம் அடுத்த சாமலாபுரம் குளத்தில் கரைப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டது. ஊர்வலத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மதியம் விடுமுறை அளிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் 1500 க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.