மூலக்கடை அருகே காந்திநகரில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கண்டெடுக்கப்பட்ட பிஏபி வாய்க்கால்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த மூலக்கடை அருகே காந்திநகர் என்ற பகுதியில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட பாசன நிலம் பயன்பெறும் வகையில் பிஏபி உப பகிர்மான கால்வாய் செல்கிறது. இந்த நிலையில் கடந்த 12 வருடங்களாக அப்பகுதியில் பாசனத்திற்கு உண்டான நீர் செல்லாமல் விவசாயம் பாதிப்படைந்து வந்துள்ளது. இதனை அடுத்து பிஏபி வெள்ளகோவில் கிளை கால்வாய்க்குட்பட்ட பாப்பினி நீர் பயன்படுத்துவோர் சங்க தலைவர் ஆனூர் சுரேஷ் தலைமையில் பிஏபி கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு தூர்வாரிய போது சுமார் 200 மீட்டருக்கு உப பகிர்மான கால்வாயில் குப்பைகளும், மண், மணல், கற்களும் குவிந்து கால்வாயே காணாமல் போனது கண்டுப்பிடிக்கப்பட்டது.
தொடர்ச்சியாக பல மாதங்கள் தண்ணீர் வராமல் இருப்பதாலும், உரிய நீர் வராததாலும், கால்வாயில் குப்பைகளை கொட்டுவதாலும் இது போன்ற விஷயங்கள் நடைபெறுகிறது. எனவே இது போன்று விவசாயத்திற்கு பயன்படும் கால்வாயில் கழிவுப் பொருட்களையும், குப்பைகளையும் கொட்டுவதை தவிர்க்க வேண்டும், உடனடியாக இது போன்று கவனிப்பாரற்று கிடக்கும் கால்வாயை தூர்வார வேண்டும் என இது சம்பந்தப்பட்ட அரசு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.