துறையூர் அருகே இரு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த இரட்டை சகோதரர்கள் போலீஸிடமிருந்து தப்பி ஓடிய போது கீழே விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஹரிஷ் (25 ) ஹரிஹரன் (25) இருவரும் இரட்டைச் சகோதரர்கள். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளை தங்களது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமிகள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சிறுமிகளின் பெற்றோர் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரட்டையர்கள் சிறுமிகளிடம் அத்துமீறிய சம்பவம் குறித்து புகார் செய்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் ஹரிஷ் மற்றும் ஹரிஹரன் ஆகியோரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து திருச்சியில் உள்ள மத்திய சிறையில் அடைப்பதற்காக போலீசார் அழைத்துச் சென்றபோது செவந்தலிங்கபுரம் பாலம் அருகே போலீசாரிடமிருந்து இருந்து இருவரும் தப்பி ஓடிய போது கீழே விழுந்தனர். இதில் இருவருக்கும் இடது காலில் முறிவு ஏற்பட்டது இதையடுத்து போலீசார் திருச்சி அரசு மருத்துவமனையில் இரட்டையர்கள் இருவருக்கும் மாவு கட்டு போட்டு சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.