திருச்சி, திருவெறும்பூர் தொகுதி திமுக எம்எல்ஏவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமாக இருப்பவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இவரது தொகுதிக்குட்பட்ட பொய்கைக்குடி கிராமத்தில் 11-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஷாலினி. இவர் +1 பொதுத்தேர்வு எழுதிய நேரத்தில் இவரது தந்தையான சண்முகம் என்பவர் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இருப்பினும் அந்த துக்கத்தை மனதில் வைத்துக்கொண்டு தளராமல், ஷாலினி பெல் வளாக பள்ளி மையத்தில் பொதுத் தேர்வை எழுதினார். இதைக்கேள்விப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இன்று மாணவி ஷாலினியின் வீட்டுக்கு நேரில் சென்று அவரது தந்தை மறைவிற்கு ஆறுதல் கூறியதோடு, மாணவியின் மன ஊக்கத்தை பாராட்டி அவரது கல்விக்கு உதவும் வகையில் உதவித்தொகை வழங்கி வாழ்த்தினார். இந்த நிகழ்வின்போது திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சி. கங்காதரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.