திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே பெரியபள்ளிபாளையம் பகுதியில் உள்ள வயல்வெளியில் கடந்த 15-ம் தேதி சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக அப்பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் துரைக்கண்ணன் காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்தநிலையில் சடலமாக கிடந்தவர் தொட்டியம் அருகே உள்ள அயினாபட்டி காலனி தெருவை சேர்ந்த வாழை இலை அறுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த சுரேஷ் (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து சுரேஷின் சடலத்தில் காயங்கள் இருந்ததால் போலீசார் விசாரணையை தீவிரபடுத்தினர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தொட்டியத்தை சேர்ந்த டிரைவர்
சிவா என்கின்ற சிவஞானம் (35) என்பவரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்து போன சுரேஷ் பெரிய பள்ளிபாளையத்தை சேர்ந்த அறிவழகன் (48) என்பவரின் பைக்கை திருடியதாகவும், இதுகுறித்து தகவல் தெரிந்து சுரேஷை தேடி கண்டுபிடித்து வயல் வெளிப்பகுதிக்கு அழைத்து சென்று சிவா(33), அறிவழகன் (48), பெரிய பள்ளிபாளையம் செல்வராஜ் (58) மற்றும் ராஜேந்திரன் (55), சின்ன பள்ளிபாளையத்தை சேர்ந்த குணசேகரன் (38) ஆகியோர் தென்னை மட்டை கொண்டு சரமாரியாக அடித்து கொன்றுள்ளனர்.
சடலத்தை சம்பவ இடத்திலேயே போட்டுவிட்டு 5 நபர்களும் தலைமறைவாகி உள்ளனர். இதையடுத்து ஐந்து பேரையும் தொட்டியம் போலீசார் கைது செய்தனர்