துறையூர் பெரிய ஏரியில் உள்ள நீரின் அளவு குறித்து நகர்மன்றத் தலைவர் நேற்று(அக்.17) ஆய்வு மேற்கொண்டார்.
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியிலுள்ள பெரிய ஏரிகளில் ஒன்று துறையூர் பெரிய ஏரி ஆகும். பச்சமலையில் மழை பொழிவு அதிகமானால் செங்காட்டுப்பட்டி, கீரம்பூர், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள ஓடைகளில் நீர் பெருக்கு ஏற்பட்டு துறையூர் பெரிய ஏரி நிரம்பி வழியும். கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பெரிய ஏரி நிரம்பி வழிந்து வருகிறது. இதனால் இந்த ஏரியில் நீர் இருப்பு இருந்தது. இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக பச்சமலை உள்பட துறையூர் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக துறையூர் பெரிய ஏரிக்கு நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பெரிய ஏரி இந்த ஆண்டும் விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து பெரிய ஏரி நீர் இருப்பு, ஏரிக்கு வரும் நீரின் அளவு, பெரிய ஏரி கடைவழிந்து செல்கிற வாய்க்கால், மதகுகள் ஆகியவற்றை துறையூர் நகர்மன்றத் தலைவர் செல்வராணி மலர்மன்னன், ஆணையர் சுரேந்திர ஷா, பொறியாளர் மகாராஜா, பயிற்சி ஆணையர் திவ்யா உள்ளிட்டோர் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் நகரில் நீர் வரத்து வாய்க்காலில் முளைத்த செடி கொடிகளை பொக்லைன் கொண்டும் அகற்றும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது.