மணப்பாறை அடுத்த கே. பெரியபட்டி ஊராட்சி எம். இடையபட்டியை சேர்ந்தவர் முருகையன் மகன் சண்முகவேல் (49), கூலித் தொழிலாளி. இவர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை அருகேயுள்ள மரவனூர் குளத்தில் மீன் பிடிக்கச் செல்வதாக தனது மகளிடம் கூறிச் சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை. எங்கு தேடினும் அவர் கிடைக்காததால் இதுகுறித்து அவரது மனைவி சித்ரலேகா (44) மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து சனிக்கிழமை முழுவதும் மணப்பாறை தீயணைப்புத் துறை வீரர்கள் கொண்டு குளத்தில் சண்முகவேலைத் தேடும் பணி நடைபெற்றது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை குளத்தில் மிதந்த சண்முகவேல் உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். மணப்பாறை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.