திருச்சி மாவட்டம். மணப்பாறையை அடுத்த இடையப் பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில், நேற்று இதே பகுதியை சேர்ந்த அ. தி. மு. க ஒன்றிய செயலாளர் (ஓ. பி. எஸ் அணி) நேதாஜி என்பவர் பள்ளியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஆசிரியர்களின் அனுமதியை பெற்று பள்ளியின் வளாகத்தில் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கியுள்ளார். இது சம்பந்தமான வீடியோ வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இதனையடுத்து,
அரசு பள்ளி வளாகத்தில் நடந்த இந்த நிகழ்வை
பார்த்து பலர் மாநில பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, திருச்சி மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் உரிய நடவடிக்கை எடுக்க உததரவிட்டார். இதன் பேரில், மணப்பாறை வட்டார உதவி தொடக்கக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தி நிகழ்ச்சி நடந்த அன்று பணியில் இருந்த உதவி தலைமையாசிரியர் உள்பட 6 ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பினார். இதனையடுத்து, உதவி தலைமையாசிரியர் வற்புறுத்தியதால் தான் விழாவில், பங்கேற்றதாக 5 ஆசிரியர்கள் விளக்கமளித்தனர். இதனையடுத்து, உதவி தலைமை ஆசிரியை அமுதாவை ட்ரான்ஸ்பர் செய்து திருச்சி மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.