மண்ணச்சநல்லூர் அடுத்து திருப்பைஞ்ஞீலி வங்கியில் தீ விபத்து - லட்சக்கணக்கான பொருட்கள் எரிந்து நாசம்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்து திருப்பைஞ்ஞீலி பகுதியில் கனரா வங்கி செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வங்கியின் உட்புறம் திடீரென தீ விபத்து ஏற்பட்டு புகைமூட்டம் வந்துள்ளது. இதனை பார்த்த அருகில் வசிப்பவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் சமயபுரம் மற்றும் மண்ணச்சநல்லூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வங்கியின் கதவை திறந்தபோது தீ வங்கி முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்துள்ளது.
இதனை அடுத்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தினால் வங்கியில் உள்ள இரண்டு கணினி பணம் கவுண்டிங் இயந்திரம் சிசிடிவி கேமரா நகை எடை போடும் இயந்திரம் என லட்சக்கணக்கான பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.
மேலும் வங்கியில் உள்ள பணம் நகைகள் பத்திரம் ஆகியவை மற்றொரு அறையில் இருந்ததால் தீ விபத்து தடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மண்ணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் மற்றும் தடையியல் துறையினர் வங்கியின் விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
போலீசாரின் முழு விசாரணைக்கு பிறகு எவ்வளவு பொருட்கள் சேதம் அடைந்துள்ளது அதன் மதிப்பு எவ்வளவு என தெரிய வரும்.