திருச்சி மாநகரில் குடியிருப்புகளிலும் சிறிய தெருக்களின் சந்திப்புப் பகுதிகளிலும் குப்பைகள் கொட்டப்படும் பகுதி அசுத்தமாக காட்சியளிக்கிறது.
மாநகராட்சியால் குப்பைகளை அகற்றி பிளீச்சிங் பவுடா், கிருமி நாசினி மருந்துகள் தெளித்துப் பராமரித்தாலும் மீண்டும் அங்கே குப்பை கொட்டுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளதால், மாநகரில் சுகாதாரக் கேடு ஏற்படுவதுடன், தெருக்களின் அழகு மற்றும் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.
இதைக் கருத்தில் கொண்டு தேங்கும் குப்பைகளை முழுமையாக அகற்றி, அங்கு நிரந்தரமாக பசுமை மற்றும் வண்ண, வண்ண அழகுக் காட்சிகளை உருவாக்கும் முயற்சியில் திருச்சி மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.
அதன்படி கலை கண்காட்சிப் பொருள்களை நிறுவுதல், பொது இடத்தில் வண்ணம் பூசுதல் மற்றும் அலங்காரச் செடிகளை நடுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு குப்பைகள் தேங்கியிருந்த இடத்தை பசுமையாகவும், அழகுக் காட்சியாகவும் மாற்றியுள்ளனா். இதற்காக ஒரு இடத்துக்கு ரூ. 5, 000 முதல் ரூ. 15 ஆயிரம் வரை செலவிடப்படுகிறது.
மாநகரில் 150 இடங்களைக் கண்டறிந்து அவற்றை படிப்படியாக அழகுபடுத்தி வருகிறோம். இதுவரை 54 இடங்கள் அழகுபடுத்தப்பட்டுள்ளன.