திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள அகிலாண்டபுரம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அமல்ராஜ் மகன் ராஜா (34). கொத்தனார். இவருக்கு மனைவி, 6 மாத கைக்குழந்தை உள்ளனர். இந்நிலையில் ராஜா சனிக்கிழமை இரவு வேலையை முடித்துவிட்டு தனது பைக்கில் லால்குடியில் இருந்து ஊர் திரும்பும்போது மேலவாளாடி ரயில்வே மேம்பாலத்தின் அருகே வேகமாக வந்த தனியார் பேருந்து மோதியது.
இதையடுத்து உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு படுகாயத்துடன் கிடந்த ராஜாவை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தகவலறிந்து வந்த ராஜாவின் உறவினர்கள் விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. தகவலின்பேரில் வந்த சமயபுரம் போலீஸார் அளித்த உறுதியின்பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். இதற்கிடையே சிகிச்சை பலனின்றி ராஜா உயிரிழந்தார். விபத்து தொடர்பாக தனியார் பேருந்து ஓட்டுநர் இளையராஜவை போலீஸார் தேடுகின்றனர்.