தூத்துக்குடியில் இலங்கைக்கு கடத்துவதற்காக குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த பீடி இலை, மஞ்சள், ஆசிட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தில் உள்ள ஒரு குடோனில் இலங்கைக்கு கடத்துவதற்காக பீடி இலை உள்ளிட்ட பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்ததாம். அதன்பேரில் தாளமுத்து நகர் காவல் ஆய்வாளர் ஜெயந்தி தலைமையில், சுங்கத்துறை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், தனிப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில், 21 மூட்டைகளில் சுமார் 840 கிலோ பீடி இலைகள், 33 மூட்டைகளில் சுமார் 2, 310 கிலோ மஞ்சள், 100 கேன்களில் ஆசிட் ஆகியவை குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், பதுக்கி வைத்தவர்களைத் தேடி வருகின்றனர்.