தூத்துக்குடி மீனவர் நடுக்கடலில் மாரடைப்பால் பரிதாபமாக இறந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி அலங்காரத்தட்டு லசால் நகரில் வசிப்பவர் சகாயம் இவரது மகன் ஜேசு நஸ்ரேன் (42). இவர் தனக்கு சொந்தமான படகில் மேலும் 5 நபர்களுடன் கடந்த 23ம் தேதி காலை மீன்பிடிக்க தூத்துக்குடி திரேஸ்புரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு 27ம் தேதிகாலை சுமார் 11. 30 மணியளவில் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு கிழக்கே சுமார் 40 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்த போது படகில் இருந்த மீனவரான தூத்துக்குடி சேர்ந்த ஜேசுவடியான் மகன் பேதுரு (47) என்பவர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியவர் சற்று நேரத்தில் படகிலேயே இறந்து விட்டார்.
இறந்தவர் பிரேதத்தை அதே படகில் நாகப்பட்டினம் மாவட்ட நம்பியார் நகர் மீன்பிடி துறைமுகத்திற்கு இரவு 7: 00 மணிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக நாகப்பட்டினம் கடலோர மரைன் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். மேலும் பிரேத பரிசோதனைக்கு பின்பு பேதுரு பிணம் தூத்துக்குடி லூர்தம்மாள் புறத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.