தூத்துக்குடி வானியன்விளை பகுதியைச் சேர்ந்த முத்துவீரன் மகன் காந்தி (64) என்பவர் கடந்த 20. 07. 2024 அன்று பக்கத்து தெருவில் உள்ள தனது மகனின் வீட்டிற்கு சென்று தங்கி விட்டு மறுநாள் (21. 07. 2024) காலையில் வந்து பார்த்தபோது அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 50 சவரன் நகை, கைக்கடிகாரம் மற்றும் ரூபாய் 55, 000/- பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து காந்தி அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் தூத்துக்குடி ஆரோக்கியபுரம் ஏ. சண்முகபுரத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் சேர்மப்பாண்டி (32) என்பவர் காந்தியின் வீட்டிற்கு புகுந்து தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் உடனடியாக சேர்மபாண்டியை கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட 45 சவரன் தங்க நகைகள், கை கடிகாரம் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி வீடு புகுந்து தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிய எதிரியை கைது செய்து, தங்க நகைகளை மீட்ட தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் வெகுவாக பாராட்டினார்.