தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி மீண்டும் போட்டியிட்டு 5, 40, 729 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் எஸ். டி. ஆர். விஜயசீலன், நாம் தமிழர் கட்சி சார்பில் ரொவீனா ரூத் ஜோன் ஆகியோர் போட்டியிட்டனர். கனிமொழியை எதிர்த்துப் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலில் 2 முறையாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி கருணாநிதி வெற்றி பெற்றார். எனவே, வாக்களித்த பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார். இன்று (13/07/2024) கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வானரமுட்டி கிராமத்தில் நன்றி அறிவிப்பு நிகழ்வு தொடங்கி, கழுகுமலை, வேலாயுதபுரம், செட்டிகுறிச்சி, அய்யனாரூத்து, கயத்தாறு, அகிலாண்டபுரம், கடம்பூர், காமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் வாக்காளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது, மக்கள் அளித்த மனுக்களையும் கனிமொழி எம். பி பெற்றுக் கொண்டார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.