தூத்துக்குடியைச் சேர்ந்த காசிராஜன் மகன் காந்தி. இவர் கடந்த 2016ஆம் ஆண்டு தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து இவர் மீது மோதி விபத்து ஏற்பட்டதில், இவரது இடது கால் முட்டுக்கு கீழ் இழந்தாராம். இதுகுறித்த வழக்கு, தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹேமா பாதிக்கப்பட்ட காந்திக்கு ரூ. 11 லட்சத்து 23 ஆயிரம் வட்டியுடன் சேர்த்து இழப்பீடு வழங்க அரசு போக்குவரத்து கழகத்துக்கு, கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து அரசு போக்குவரத்து கழகம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கீழ்கோர்ட்டின் தீர்ப்பை கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி உறுதி செய்து உத்தரவிட்டார். அதன்பிறகும் அரசு போக்குவரத்து கழகம் நஷ்டஈடு தொகையை வழங்கவில்லையாம்.
இதையடுத்து, தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் செல்வராஜ் மூலம் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி வசித்குமார், அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில், தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் நின்ற அரசுப் பேருந்தை, நீதிமன்ற ஊழியர்கள் நேற்று (செப்.23) ஜப்தி செய்தனர்.