தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே அமைந்துள்ளது பேட்மா நகரம் கிராமமாகும். இங்கு 100 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அங்கு வசித்து வரும் இஸ்லாமியர்கள் தங்கள் இடத்திற்கான பத்திர ஆவணங்களை முறையாக வைத்துள்ள நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திமுக அரசின் வருவாய்த்துறை சார்பில் இஸ்லாமியர்கள் வசிப்பது அரசுக்கு சொந்தமான இடம் எனக் கூறியும், அந்த இடத்தில் இஸ்லாமியர்கள் இனிமேல் வீடு மற்றும் கட்டிடங்கள் எதுவும் கட்டக்கூடாது என தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதன் காரணமாக அந்தப் பகுதியில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பேட்மா நகரம் இஸ்லாமிய கிராம மக்கள் சார்பில் முறையான ஆவணங்களை தாசில்தார், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பித்தும், இதுவரை இதற்கு உரிய தீர்வு எடுக்காமல் மாவட்ட நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது. இஸ்லாமியர்களின் பாதுகாவலர் எனக் கூறிவரும் தமிழக அரசு இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு தங்களுக்குரிய இடத்தை முறையாக தங்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, இன்று நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள், இஸ்லாமிய பெண்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.