தூத்துக்குடி: அந்தப் பக்கம் போகாதீங்க மக்களே!

6701பார்த்தது
தூத்துக்குடி: அந்தப் பக்கம் போகாதீங்க மக்களே!
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த வாரம் பெய்த வரலாறு காணாத மழையால் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் ஏரல் புதுப்பாலத்தின் ஒரு பகுதி அடித்து செல்லப்பட்டது. அப்பகுதியில் உள்ள குளங்களும் நிரம்பி உடைந்ததால், ஏரல் நகருக்குள் தண்ணீர் புகுந்ததால் வீடுகள், கடைகளை மூழ்கடித்த வெள்ளம் தனித்தீவாக்கியது. வெள்ளம் சற்று வடிந்த நிலையில், ஒரு வாரத்துக்கு பிறகு ஏரல் புதுப்பாலத்தின் அருகில் உள்ள தரைமட்ட பாலத்தை சீரமைத்து, அதன் வழியாக போக்குவரத்து தொடங்கப்பட்டது. இந்த நிலையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 3 நாட்கள் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. அதன்படி மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தால் தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர், ஸ்ரீவைகுண்டம் தடுப்பணைகளை தாண்டி ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீர், ஏரல் தரைமட்ட தாம்போதி பாலத்தில் அனைத்து குழாய்களையும் மூழ்கடித்தவாறு செல்கிறது. இன்னும் ஒரு அடி நீர்மட்டம் உயர்ந்தாலும் தரைமட்ட பாலம் மூழ்கும் அபாயம் உள்ளது. இதனால் மீண்டும் ஏரல்-குரும்பூர் இடையே போக்குவரத்து துண்டிக்கப்படும் நிலை உள்ளது.

தொடர்புடைய செய்தி