தூத்துக்குடியில் காட்டுப்பகுதியில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி அய்யனடைப்பு, ஏ. கைலாசபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் சரவணன் (48). மரம் வெட்டும் தொழிலாளியான இவர் நேற்று (ஜனவரி 1) மதியம் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். இரவு வரை வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரைத் தேடிச்சென்றுள்ளனர். அப்போது ஏ. கைலாசபுரம் - சண்முகபுரம் சாலையில் காட்டுப் பகுதியில் அவர் கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சைரஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை ரூரல் டிஎஸ்பி சுகிர் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். சரவணன் தலையில் கட்டையால் தாக்கப்பட்ட காயம் இருந்தது. அவரை கொலை செய்தவர்கள் யார்- கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட சரவணனுக்கு 2 மனைவியர் மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர். புத்தாண்டு தினத்தில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.