தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு தாலுகா தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்தில் மானங்காத்தான் கிராமத்தில், தனியார் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ. 94.4 லட்சம் மதிப்பில், பழுதடைந்த 20 காலனி வீடுகளை இடித்துவிட்டு, புது வீடுகள் கட்டுவதற்குக் கனிமொழி ஏற்பாடு செய்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி கட்டுமான பணிகள் நிறைவு பெற்ற 9 வீடுகள் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கப்பட்டது.
இன்று (செப்.,12) கட்டுமான பணிகள் நிறைவு பெற்ற 11 வீடுகளைக் கனிமொழி திறந்து வைத்து பயனாளர்களுக்கு வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஒன்றியம் தெற்கு இலந்தைகுளம் ஊராட்சியைக் கனிமொழி கருணாநிதி எம்.பி. தத்தெடுத்துள்ளார்.
அந்த ஊராட்சிக்குட்பட்ட மானங்காத்தான் என்ற கிராமத்தில் கடந்த 1996ஆம் ஆண்டு கட்டப்பட்ட காலனி வீடுகள் மிகவும் பழுதடைந்து உள்ளதாகவும் சிதிலமடைந்திருந்த தொகுப்பு வீடுகளுக்கு மாற்றாக கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக் வேண்டும் என்றும் கனிமொழி எம்.பியிடம் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிகழ்வில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து தலைவர் செல்வி ரவிக்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.