தூத்துக்குடி: புகையிலைப் பொருள்கள் பறிமுதல்.. 3 பேர் கைது
திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி புறவழிச் சாலையில் உள்ள அணுகுசாலையில் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் நேற்று (நவம்பர் 24) ரோந்து பணியில் ஈடுபட்டார்களாம். அப்போது பேருந்து ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, புகையிலைப் பொருள்களை கொண்டு வந்த பேருந்து, புகையிலைப் பொருள்களை லோடு ஆட்டோவில் ஏற்றும் பணியில் ஈடுபட்ட 2 பேர், லோடு ஆட்டோ மற்றும் பேருந்தில் கொண்டுவரப்பட்ட தடை செய்யப்பட்ட பொருள்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து கிழக்கு காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும், புகையிலைப் பொருள்களை நான்தான் கொண்டு வந்தேன் எனக் கூறி போலீசாரை மிரட்டி பணி செய்யவிடாமல் தடுத்ததாக டிரைவரையும் கிழக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து, லோடு ஆட்டோ டிரைவர் இளையரசனேந்தல் மேற்கு தெருவை சேர்ந்த இ. அகஸ்டின்ராஜா (32), தென்காசி மாவட்டம் கரிசல்குளம் மேலத்தெருவை சேர்ந்த வெ. ராமசுப்பு (40), திருநெல்வேலி மாவட்டம் சங்கர் நகர் குறிச்சிகுளம் வடக்குத் தெருவை சேர்ந்த இ. பாலசுப்பிரமணியன் (40) ஆகிய 3 பேரை கைது செய்தனர். ஆட்டோ, அதில் கொண்டுவரப்பட்ட சுமார் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.