ஆர். கே. பேட்டையில் இருந்து சோளிங்கர் வழியாக வள்ளிமலை செல்லும் சாலையில் அமைந்துள்ளது, விடியங்காடு கூட்டுச்சாலை. இந்த கூட்டுச்சாலையில் இருந்து, 500 மீட்டர் துாரத்தில் விடியங்காடு கிராமம் உள்ளது.
இந்த கிராமத்தில், அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. சுற்றியுள்ள 25 கிராமங்களில் இருந்து, விடியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மாணவர்கள் வந்து படிக்கின்றனர்.
இந்நிலையில், கூட்டு சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை இல்லை. இதனால், பள்ளி மாணவர்களும், கிராமவாசிகளும் மரத்தடியில் காத்திருந்து பேருந்து பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
மேலும், மழை மற்றும் வெயிலில் பயணியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பகுதியில் குடியிருப்பு மற்றும் கடைகள் என, எந்தவொரு கட்டடமும் இல்லை. அதனால், இரவு நேரத்தில் பேருந்துக்காக காத்திருப்பவர்கள் அச்சத்தில் தவிக்கின்றனர்.
எனவே, இப்பகுதி வாசிகளின் தேவையை கருத்தில் கொண்டு, உடனடியாக புதிய நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.