திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சி அலுவலகம் அருகே வார சந்தை கட்டிடம் செயல்படாமல் இருந்தது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த 10 குடும்பத்தைச் சேர்ந்த 30 நரிக்குற இனத்தவர்கள் அந்த வார சந்தை கட்டிடத்தில் தங்கி குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் பேரூராட்சி அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் இருந்து பேட்டரி போன்ற பொருட்கள் திருடு போவதாக கூறி நரிக்குறவர் குடும்பத்தை அங்கிருந்து வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இதனால் தங்குவதற்கு இடம் இல்லாததால் மாற்று இடம் வழங்க கோரி பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தை நரிக்குறவர்கள் முற்றுகையிட்டனர். இதனையடுத்து வட்டாட்சியர் ஜீவகுமார், வருவாய் ஆய்வாளர் அன்பரசன், செயல் அலுவலர் விஜயகுமார் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நரிக்குறவர்களாகிய தாங்கள் தங்குவதற்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து தற்காலிகமாக ஏற்கனவே தங்கியிருந்த பேரூராட்சி அலுவலகம் அருகிலுள்ள வார சந்தை கட்டிடத்தில் தங்க அனுமதி அளித்து மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து நரிக்குறவர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.