திருத்தணி அருகே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை தமிழக எல்லையில் உள்ள பொன் பாடி சோதனைச் சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து திருத்தணி நோக்கி வந்த இரு சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை இட்டதில் அதில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை எடுத்து வந்தது தெரியவந்தது.
இதை எடுத்து வந்த இருவரை பிடித்து போலீசார் திருத்தணி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இவர்கள் ஆந்திர மாநிலம் நகரியில் இருந்து தமிழக எல்லையோரப் பகுதியான திருத்தணியில் குட்கா விற்பனை செய்ய 30 கிலோ குட்காவை எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதன் மதிப்பு ரூபாய் 70 ஆயிரம் ஆகும். குட்காவை கடத்தி வந்தது ஆந்திர மாநிலம் நகரியை சேர்ந்த மோகன்(52), சாய் சரண்(27) ஆகிய தந்தை, மகன் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவர்களிடமிருந்து இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், 70 ஆயிரம் மதிப்புடைய குட்காவையும் போலீசார் பறிமுதல் செய்தனர், இவர்கள் இருவரையும் கைது செய்து திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆந்திராவைச் சேர்ந்த தந்தை- மகன் தமிழகத்தில் திருத்தணியில் தடை செய்யப்பட்டுள்ள குட்காவை எடுத்து வந்து விற்பனை செய்ய முயன்றவர்களை கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.