பெங்களூருவில் இருந்து காரில் பிரவுன் சுகர் மற்றும் கஞ்சாவை கடத்தி வருவதாக வந்த தகவலையடுத்து தாம்பரம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி தலைமையில் தாம்பரம் மதுவிலக்கு போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். குன்றத்தூர் அருகே வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சந்தேகத்திற்கிடமாக வந்த காரை மடக்கி சோதனை செய்தபோது அந்த காரில் வந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினார்கள் மேலும் காரை சோதனை செய்த போது 200 கிராம் பிரவுன் சுகர் மற்றும் ஐந்து கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காரை ஓட்டி வந்த சிவகங்கை மாவட்டம், கோட்டையூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல்(34), மற்றும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சபீனா காடூன்(30), ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். மேலும் விசாரணையில் பெங்களூருவில் இருந்து தடை செய்யப்பட்ட பிரவுன் சுகர் மற்றும் கஞ்சாவை எடுத்து வந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சப்ளை செய்ய வந்தது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ஒரு கார் 200 கிராம் பிரவுன் சுகர், 5 கிலோ கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் பறிமுதல் செய்யப்பட்ட 200 கிராம் பிரவுன் சுகர் மதிப்பு ரூ. 30 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.