புழலில் பூட்டிய வீட்டிற்குள் முதியவர் தூக்கிட்டு தற்கொலை. துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு.
சென்னை புழல் அறிஞர் அண்ணா நகர் பிரதான சாலையை சேர்ந்தவர் செல்வராஜ் (62). மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் வெளியூரில் வசித்து வரும் நிலையில் செல்வராஜ் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். சொந்தமாக தையல் இயந்திரம் கொண்டு வீட்டில் இருந்தபடியே துணி தைத்து கொடுக்கும்
வேலை செய்து வந்தார். இன்று காலை அவரது வீட்டை கடந்து செல்ல முயன்ற போது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் புழல் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த புழல் போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது முதியவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருந்தது தெரியவந்தது. அழுகிய நிலையில் இருந்ததால் முதியவர் 2, 3 தினங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
தொடர்ந்து முதியவரின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணங்களை விசாரித்து வருகின்றனர்.