தேனியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரில் வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
மதுரை திருநகர் பகுதியை சேர்ந்தவர் முரளிதரன். இவர் தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், வட்டார போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
தற்போது தேனி என். ஆர். டி. நகரில் வாடகை வீட்டில் அவர் வசித்து வருகிறார். இந்தநிலையில் முரளிதரன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார்கள் எழுந்தன. அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு கருப்பையா தலைமையில், இன்ஸ்பெக்டர் ஜெயபிரியா மற்றும் 4 போலீசாரை கொண்ட குழுவினர், என். ஆர். டி. நகரில் முரளிதரன் வசிக்கும் வீட்டுக்கு நேற்று காலை 7 மணி அளவில் வந்தனர். அப்போது வீட்டில் யாரும் இல்லை. இருப்பினும் பணம் எண்ணும் கருவியுடன் அதிகாரிகள் வீட்டுக்குள் நுழைந்தனர். மேலும் வீட்டை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு அவர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே முரளிதரனின் கார், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அங்கும் சென்று காரில் சோதனையிட்டனர். மதியம் 2. 30 மணி வரை இந்த சோதனை நீடித்தது. இந்த சோதனையில் பணம், ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து சோதனையில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "தேனியில் நடந்த சோதனையில் எந்த ஆவணமும் சிக்கவில்லை. இதேபோன்று மதுரை திருநகரில் உள்ள அவருடைய வீட்டிலும், சென்னையில் உள்ள அவரது தோழி ஒருவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பாக மதுரையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.