போடி அருகே சனிக்கிழமை, இரு சக்கர வாகன மெக்கானிக் இறந்து போனது குறித்து போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சில்லமரத்துப்பட்டி பகவதியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் முருகன் மகன் மணிகண்டன் (32). இவா் போடியில் உள்ள தனியாா் இரு சக்கர வாகன விற்பனையகத்தில் வாகன பழுது நீக்குபவராக பணிபுரிந்து வருகிறாா். இவருக்கும் கோடாங்கிபட்டியை சோ்ந்த புவனேஸ்வரி என்பவருக்கும் திருமணமாகி குழந்தை இல்லாமல் உடல்நிலை பாதிக்கப்பட்ட புவனேஸ்வரி அவரது தாயாா் வீட்டில் இருந்து வருகிறாா்.
இந்த நிலையில் மணிகண்டனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்படவே தனியாா் மருத்துவமனைக்கும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் அழைத்துச் சென்றதில் சரியாகிவிட்டது. வீட்டிற்கு வந்த நிலையில் மீண்டும் நெஞ்சு வலிப்பதாக கூறவே 108 அவசர ஊா்திக்கு தகவல் தெரிவித்தனா். 108 அவரச ஊா்தி பணியாளா்கள் வந்து பரிசோதித்ததில் மணிகண்டன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனா்.
இது குறித்து மணிகண்டன் தாயாா் செல்வி (55) போடி தாலுகா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.