ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கையில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் புறக்கணிக்கப்
பட்டுள்ளதாகக் கூறி குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெள்ளிக்கிழமை வெளிநடப்பு செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தெ. தியாகராஜன், வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை, நீர்வள ஆதாரத்துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டம் துவங்கியதும், புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்து விவசாயிகள் தென்னங்கன்று, ரோஜாச் செடி, சாக்லெட் ஆகியவற்றை வழங்கினர்.
பின்னர் ஒன்றிய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தில் விவசாயிகளின் நலன், விவசாயத் தொழிலாளர்களின் நலன்களும், கோரிக்கைகளும் புறந்தள்ளப்பட்டதாக கூறி விவசாயிகள் ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கமிட்டவாறு கூட்டத்தை விட்டு சிறிது நேரம் வெளிநடப்பு செய்தனர். பின்னர் திரும்ப வந்து கூட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.