தஞ்சையில் சின்ன வெங்காயம் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. கிலோ ரூபாய் 100க்கு விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சை அரண்மனை வளாகத்தில் காமராஜர் காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள 300-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், தமிழகத்தில் ஓசூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து வெளியூர்களுக்கும் விற்பனைக்கு காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்தது. குறிப்பாக தக்காளி 180, வெங்காயம் கிலோ 120 வரை விற்பனை செய்யப்பட்டது. வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரத்து அதிகரிக்க தொடங்கியதும் விலை குறைந்தது. அதன்படி சின்ன வெங்காயம் கிலோ 40 வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. வரத்து குறைவாக இருப்பதால் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன்படி தஞ்சையில் இன்று சின்ன வெங்காயம் கிலோ ரூபாய் 100-க்கு விற்பனை செய்யப்பட்டது. ரூபாய் 30 முதல் விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயம் 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. விளைச்சல் குறைந்ததால், வரத்து குறைந்து காணப்படுவதால் விலை அதிகரித்து காணப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.