தஞ்சாவூர் மாவட்டம்,
பேராவூரணி பகுதியில் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி
அடைந்துள்ளனர். வெயிலின் தாக்கம் குறைந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை,
பேராவூரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக கடும் வெயில் காரணமாக, நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்ததால் பொதுமக்கள் வெளியில் செல்லத்தயங்கி பெரும்பாலனோர் வீட்டிலேயே இருந்தனர்.
இந்நிலையில், பேராவூரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமையன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென 20 நிமிடம் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வழிந்தோடியது.
தற்போது பெய்த மழையினால், நெல், கடலை, எள், உளுந்து மற்றும் தென்னை சாகுபடிக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என விவசாயிகள் தெரிவித்தனர், கடந்த இரண்டு மாதமாக வெயில் அடித்த நிலையில் தற்போது பெய்த மழை சற்று குளிர்ச்சியை தந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர். ஆனாலும் மழைக்குப் பிறகு மீண்டும் வெயில் கொளுத்தத் தொடங்கியது.