பட்டுக்கோட்டை அருகே பொதுமக்களை விரட்டி கடிக்கும் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் நேற்று(செப்.7) கோரிக்கை விடுத்துள்ளனர்.
பட்டுக்கோட்டை அருகே உள்ள வேப்பங்காடு கிராமப் பகுதியில் தெருநாய்கள் 10- க்கும் மேற்பட்டவர்களையும் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடுகளையும் கடித்து காயப்படுத்தியதால் அந்தப் பகுதி மக்கள் அச்சத்தில் இருந்து வத்தனர். இந்தநிலையில் கடந்த 3 நாட்களில் மட்டும் வேப்பங்காடு பகுதியில் மணி மகன் ராஜா, ஜெயக்குமார் மகன் இளையராஜா, 2வயது குழந்தை, உள்பட பலரை தெருநாய்கள் விரட்டி கடித்ததுடன், அவர்கள் வளர்க்கும் ஆடுகளையும் கடித்து குதறி உள்ளன. இதனால் பொதுமக்கள் நடமாட அச்சப்பட்டு வருகிறார்கள்.
நாய்களைப் பிடித்து கொலை செய்யக்கூடாது என்ற சட்ட விதிகளின்படி நடக்க வேண்டி இருப்பதால் தெரு நாய்களின் பெருக்கத்தை தடை செய்ய வழி இல்லாமலும், தெரு நாய்களிடமிருந்து பொதுமக்களை காக்க என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளாட்சி நிர்வாகிகள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே தெரு நாய்கள் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.