ஸ்ரீமுனீஸ்வரர் சுவாமி ஆலய உற்சவ கொடைவிழா

54பார்த்தது
கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி செக்கடி தெருவில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீமுனீஸ்வரர் சுவாமி ஆலயத்தில் ஆண்டுதோறும் உற்சவ கொடைவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இவ்வாண்டும் 33ம் ஆண்டாக உற்சவ கொடைவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த 02ம் தேதி சுவாமிக்கு காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கி, முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காவிரி படித்துறையிலிருந்து நாதஸ்வரம், மேள தாள மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் தீர்த்த குடம், பால்குடம், அலகு காவடிகள் எடுத்து வானவேடிக்கையுடன் மாநகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து ஆலயத்தை அடைந்தது. பின்னர் மதியம் பாலபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நேற்றிரவு ஸ்ரீமுனீஸ்வரர், ஸ்ரீசுடலைமாடன், ஸ்ரீகருப்பண்ணசுவாமி, ஸ்ரீவீரன் சுவாமி புறப்பட்டு வீதியுலா காட்சி நடைபெற்று, நள்ளிரவு ஒரு மணிக்கு சாமக்கொடையும், தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று 10ம் தேதி காலை மகா அன்னதானமும், வரும் 12ம் தேதி இரவு விடையாற்றி விழாவுடன், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு இவ்வாண்டுக்குரிய விழா நிறைவுபெறுகிறது. விழா ஏற்பாடுகளை தெருவாசிகள் மற்றும் இளைஞர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி