ஒரத்தநாடு: கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களுக்கு பயிர் கடன்
தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் அறிவழகன், கோவிந்தராஜ், கண்ணன், ரவிசந்தர், வீர ராஜேந்திரன், இளங்கோவன், சுகுமாரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது மாவட்டம் முழுவதும் செயற்கை உரத்தட்டுப்பாடு நிலவுவதை தடுக்க வேண்டும். பூதலூர் ஒழுங்குமுறை கூடத்தை தொடர்ந்து நிரந்தரமாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்கப்படுவதில்லை. எனவே பயிர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகத்தில் போதிய அலுவலர்கள் இல்லாமல் பற்றாக்குறையாக உள்ளது. எனவே காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். தற்போதுள்ள பயிர் காப்பீட்டு முறை விவசாயிகளுக்கு பயனில்லாமல் உள்ளது. தனிப்பட்ட விவசாயிக்கும் காப்பீடு கிடைக்கும் விதமாக பயிர் காப்பீட்டு முறையை அமல்படுத்த வேண்டும். தூர்வாரும் பணிக்கு போதுமான அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. ஒதுக்கப்பட்ட நிதியிலும் சரியாக தூர்வாரப்படுவதில்லை. ஒட்டுமொத்தத்தில் நீர் மேலாண்மை திட்டம் தோல்வியடைந்துள்ளது. சம்பா சாகுபடி முழுவீச்சில் மேற்கொள்ளப்படும் நிலையில் விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள், தெளிப்பான்களை மானிய விலையில் காலதாமதப்படுத்தாமல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர்.