தஞ்சை மாவட்டம் பாப்பாநாடு காவல் உதவி ஆய்வாளர் உதயசூரியன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் (செப்.19) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வடசேரி அருகில் உள்ள கண்ணணாறு பகுதியில் மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்த நபரை நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்தவர் கீழக்குறிச்சி மேலத்தெருவை சேர்ந்த சிவானந்தம் (வயது36) என்பதும், இவர் அனுமதியின்றி மணலை அள்ளி விற்பனை செய்வதற்காக மாட்டு வண்டியில் கொண்டு சென்றது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து சிவானந்தத்தையும் மாட்டு வண்டியையும் போலீசார் பாப்பாநாடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து பாப்பாநாடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிவானந்தத்தை கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மாட்டு வண்டியையும் பறிமுதல் செய்தனர்.