தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் பகுதியில் கட்டப்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படாத
நலவாழ்வு மையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை பள்ளியக்ரஹாரம் ஸ்ரீஹரி நகரில் நகர்ப்புற நலவாழ்வு மையம் என்ற பெயரில் ஒரு கட்டடம் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இந்த கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் கட்டிடம் பழமையாகி சிதலமடைந்து வருகிறது. எனவே உடனடியாக இந்த கட்டிடத்தை திறக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், தஞ்சை மாநகராட்சி சார்பில் பல மாதங்களுக்கு முன்பு நகர்ப்புற நலவாழ்வு மையம் கட்டப்பட்டு வீணாக கிடக்கிறது. ரூ. 25 லட்சம் செலவில் கட்டப்பட்ட இந்த கட்டடத்தை புனரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இந்த கட்டிடத்தில் முன் புல், பூண்டுகள் முளைத்து புதர்மண்டி வீணாகி வருவதால் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி கூட்டத்தில் நகர்ப்புற நலவாழ்வு மையம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்னும் திறப்பு விழா காணாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.