கும்பகோணம் காவிரி ஆற்றில் குளித்த ஆட்டோ ஓட்டுநர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் காசிராமன் தெருவில் வசித்தவர் சுவாமிநாதன் மகன் முருகேசன் ( 62) ஆட்டோ ஓட்டுநராக இருந்தார்.
நாள்தோறும் ஆட்டோ சவாரி முடிந்த பின்பு மாலை வேளையில் காவிரி ஆற்றில் குளித்துவிட்டு வீட்டுக்கு செல்வது வழக்கம்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அதே போல சகாஜி தெரு காவேரி ஆற்றுப்படித்துறையில் ஆட்டோ நிறுத்திவிட்டு ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அவரை தேடி வந்துள்ளனர். படித்துறையில் ஆட்டோ மட்டும் இருந்துள்ளது.
சந்தேகத்தின் பேரில் ஆற்றில் மூழ்கி இருக்கலாம் என்று கருதி கும்பகோண கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் சிவ செந்தில்குமார் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து ஆற்றில் மூழ்கிய ஆட்டோ ஓட்டுநர் முருகேசன் சடலத்தை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகிறார்.