சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சேவினிபட்டி கிராமத்தில் உள்ள குன்றத்தி கண்மாயில் மழை வேண்டியும், விவசாயம் தழைக்க வேண்டியும் மீன்பிடித் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பொதுவாக திருப்பத்தூர் பகுதிகளில் உள்ள பாசனகண்மாயில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலத்தில் நீர் வற்றும் சூழலில் இந்த மீன்பிடி திருவிழா நடத்துவது வழக்கம். அதேபோன்று சேவினிப்பட்டி கிராமத்திலும், பாசனக் கண்மாயில் எஞ்சி உள்ள தண்ணீரில் இன்று மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இன்று மீன் பிடித்திருவிழா நடைபெறும் என கிராமத்தார்கள் அறிவிப்பு செய்ததை அடுத்து கீழச்செவல்பட்டி, வேலங்குடி, ஆவணிப்பட்டி, ஆத்திரம்பட்டி மலம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த பல்வேறு கிராமங்களில் இருந்தும், புதுக்கோட்டை திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஊத்தா கூடை மூலம் மீன் பிடிக்க சுமார் 500-க்கும் மேற்பட்டோர் ஊத்தா கூடையுடன் கலந்து கொண்டனர். ஒரு ஊத்தா கூடைக்கு ரூ. 150 கட்டணம் செலுத்தி மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில் மீன் பிடிக்க அனுமதி கிடைத்தவுடன், ஒரே நேரத்தில் மின்னல் வேகத்தில் கரையில் இருந்து ஓடி வந்து கண்மாய்க்குள் இறங்கி போட்டிப் போட்டுக் கொண்டு ஊத்தாவை வைத்து மீன் பிடித்தனர்.