சிவகங்கை தொழிலாளர் நலவாரிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டத்துக்கு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச்செயலர் எஸ். கே. சிவசாமி தலைமை வகித்தார். கட்டடத்தொழிலாளர் சங்க தலைவர் ஏ. ஜி. ராஜா, கௌரவத்தலைவர் கே. பிச்சைமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச்செயலர் என். சாத்தையா, உள்ளாட்சி தொழிலாளர்கள் சங்க மாநில துணைத்தலைவர் பிஎல். ராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச்செயலர் பி. மருது ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
கோரிக்கைகள்: வாரிய முடிவுகளை வாரியமே நிறைவேற்ற தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் சட்டத்தில் உள்ளபடி இஎஸ்ஐ மருத்துவ வசதி வழங்க வேண்டும். வாரிய முடிவுப்படி ஓய்வூதியம் மாதம் ரூ. 2000 உடனே வழங்க வேண்டும். மனு செய்த அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும். வீடுமானியம் ரூ. 4 லட்சம் என்பதை ரூ. 10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். வீட்டுவசதி திட்டத்தை துவங்கி 3 ஆண்டுகள் கடந்தும் திட்டத்தை நிறைவேற்றாத அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலை இடத்தில் விபத்தில் மரணமடையும், ஊனமடையும் தொழிலாளிக்கு இழப்பீட்டு சட்டப்படி முழு இழப்பீடு வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.