போக்குவரத்துக்கழக பணிமனை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

66பார்த்தது
சிவகங்கை நகர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகே இன்று நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் காளைகளை அடக்க முயன்ற 5 பேர் காயமடைந்தனர்.
தமிழக துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, என். என். கே. நவனி நண்பர்கள் இணைந்து நடத்திய இந்த வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 20 காளைகளும் அதேபோல் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 180 வீரர்களும் பங்கேற்றனர்.
வட்ட வடிவில் அமைக்கப்பட்டிருந்த மைதானத்தின் நடுவே நீண்ட கயிற்றால் கட்டப்பட்ட காளையை 25 நிமிடத்திற்குள் 9 பேர் கொண்ட மாடுபிடி வீரர்கள் அடக்க வேண்டும் என நேரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
போட்டியில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களையும், அடங்க மறுத்த காளையின் உரிமையாளர்களையும் வெற்றி பெற்றதாக அறிவித்து ரொக்கப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். போட்டியில் மாடு முட்டியதில் 5 வீரர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இந்த வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை சிவகங்கை, ரோஸ்நகர், மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த வடமாடு மஞ்சுவிரட்டு ஆர்வலர்கள் கலந்து கொண்டு உற்சாகமாக கண்டுகளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி