தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பில் 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் இன்று (செப்.,10) சிவகங்கையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்றது.
இந்த வேலைநிறுத்தப் போராட்ட விளக்க ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஜான் பீட்டர் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளருமான சகாயதைனேஷ் முன்னிலை வகித்தார்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில்தொடக்கக்கல்வி துறையில் பணியாற்றும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பதவி உயர்வை பறிக்கும் அரசாணை எண் 243 -ஐ ரத்து செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷசன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். பறிக்கப்பட்ட சரண் விடுப்பு ஊக்க ஊதிய உயர்வை மீண்டும் அளிக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பனல் உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடை பெற்றது.
இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் வருகிற 29, 30 -மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் சென்னை கோட்டை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.