சிவகங்கை மாவட்டம்
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் தமிழ் மொழிக்கு பதிலாக பிற மாநில மொழிகள் தோன்றும் நிலைமை வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய அரசு இந்தி திணிப்பில் ஆர்வம் காட்டும் சூழலில், தற்போது வங்கிகளில் மொழி முறைமை யாருக்கும் தெரியாமல் மாற்றப்பட்டுள்ளதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் செயல்படும் இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆகியவற்றின் ஏடிஎம் மையங்களில் கடந்த ஒரு வாரமாக தமிழ் மொழியை தேர்வு செய்தால் தெலுங்கு அல்லது ஆங்கிலம் திரையில் தோன்றும் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இது ஏராளமான வாடிக்கையாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியன் வங்கியின் தேசிய நெடுஞ்சாலை அருகிலுள்ள ஏடிஎம் மையத்தில் இரண்டு இயந்திரங்கள் இருந்தும், ஒரு இயந்திரத்தில் இப்பிரச்சனை எழுந்ததால் நிர்வாகம் அந்த இயந்திரத்தை முடக்கி வைத்தது. இதனால் தற்போது ஒரு இயந்திரத்தில் மட்டுமே பணம் வைக்கவும், எடுக்கவும் சிரமப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.