சேலம் சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த நாசர் மகன் மன்சூர் அகமது (வயது 32). இவர், தன்னுடைய நண்பரான சோளம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் ரமேசுடன் (34) காரில் ஏற்காடு சென்றனர். ஏற்காட்டைச் சுற்றிப் பார்த்து விட்டு சேலம் நோக்கி வந்தனர். 60 அடி பாலத்தைக் கார் கடந்த போது ஓட்டியவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த 2 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த ஏற்காடு போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.