சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பெரியார் பிறந்தநாள் விழா, பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கம் கூட்ட அரங்கில் நடந்தது. கருத்தரங்கில் பெரியார், அண்ணா, கருணாநிதி உருவப்படங்கள் வைக்கப்பட்டு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மு. கருணாநிதி ஆய்வு மையத்தின் இயக்குனர் (பொறுப்பு) சுப்பிரமணி வரவேற்றார். பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன் தலைமை தாங்கி பேசினார்.
அறிவால் விளையும் உலகு என்ற தலைப்பில் எழுத்தாளர் அ. தாயப்பன் பேசுகையில், எல்லா தலைவர்களும் கேள்விகளுக்கு பதில் சொல்லி கொண்டிருந்தனர். ஆனால் பெரியார் மட்டுமே கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தார். எனவே பெரியாரை நாளைய உலகிற்கு இளைஞர்கள் கொண்டு செல்ல வேண்டும் என்றார். இருள் நீக்கிய முச்சுடர்கள் என்ற தலைப்பில் புலவர் செந்தலை ந. கவுதமன் பேசினார். கருத்தரங்கில் பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் பட்ட ஆய்வாளர் நரேன்குமார் நன்றி கூறினார்.