சேலம் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சேலம் மாவட்டத்தில் 671 மில்லிமீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 98 மில்லிமீட்டரும், சேலம் மாநகரப் பகுதியில் 94 மில்லிமீட்டரும் மழை பதிவானது. சேலம் மாநகரப் பகுதியில் பெய்த கன மழை மற்றும் ஏற்காட்டில் பெய்த மழை காரணமாக திருமணி முத்தாற்றில் வெள்ளம் இருகரைகளையும் தொட்டபடி கரைபுரண்டோடுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சாக்கடை கால்வாயாக காட்சியளித்த திருமணிமுத்தாறு கன மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்தால் கரைபுரண்டோடுகிறது. திருமணிமுத்தாறு சேலம் மாநகரின் முக்கியப்பகுதிகள் வழியாக நாமக்கல் வரை செல்கிறது. நகரை ஊடறுத்து செல்லும் திருமணிமுத்தாற்றில் கரை புரண்டோடுவதால் நகரின் முக்கிய பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. கந்தம்பட்டி பகுதியில் கரைபுரண்டோடும் வெள்ளம் சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் புகுந்ததால் தேசிய நெடுஞ்சாலை ஆறுபோல் காட்சியளித்து. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அப்பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம், மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களில் வெள்ள நீர் புகுந்ததால் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நீரில் மூழ்கின. வெள்ளநீர் முழுமையாக வடியும் வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன.