சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் நடந்தது. சங்ககிரி அருகே உள்ள அரசிராமணி செட்டிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
பின்னர் இதுகுறித்து மாணவர்கள் கூறும் போது, ‘செட்டிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் அதற்கான கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. குறிப்பாக கூடுதல் வகுப்பறைகள் இல்லாததால் ஆய்வகங்களிலும், தற்காலிக கூடாரம் அமைத்தும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. எனவே மாணவர்கள் நலன் கருதி கூடுதல் வகுப்பறைகள் கட்டி கொடுக்க வேண்டும்’ என்றனர்.