சமையல் கேஸ் பாதுகாப்பாகவும் சிக்கனமாகவும் பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு முகாம் சேலம் அரசு பெண்கள் கலைக் கல்லூரி மாணவிகள் விடுதியில் நடைபெற்றது. முகாமை சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து அவர் பேசும்போது சமையல் கேஸை பயன்படுத்தும் போது அஜாக்கிரதையாக இருந்து விடக்கூடாது. எப்போதும் விழிப்புடன் செயல்பட்டு கேஸ் கசிவால் ஏற்படும் விபத்துகளை தடுக்க வேண்டும் என்றார். தொடர்ந்து சேலம் மாடர்ன் கேஸ் நிறுவன மேலாளர் செந்தில்குமார் பேசுகையில் கேஸ் சிலிண்டரில் கசிவு இருப்பதை கண்டுபிடித்தவுடன் ரெகுலேட்டரை ஆஃப் செய்து விட்டு வெள்ளை துணியால் சிலிண்டரை மூடி விட்டு அதனை வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும்.
தொடர்ந்து மின்விளக்குகள் மின்சார பொருட்களை இயக்கக் கூடாது. கதவு ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டும். தொடர்ந்து கேஸ் நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்து கேஸ் கசிவை சரி செய்ய வேண்டும். சமையலுக்கு தேவையான பொருட்களை தயாராக வைத்துவிட்டு அரிசி, பருப்பு வகைப் பொருட்களை ஊற வைத்து சமையல் செய்தால் எரிபொருள் சிக்கனமாக பயன்படுத்தலாம் இவ்வாறு பேசினார். தொடர்ந்து சமையல் கேஸை பாதுகாப்பாக பயன்படுத்துவது தொடர்பாக சிறப்பாக பேசிய மாணவிகளுக்கு மேயர் ராமச்சந்திரன் பரிசுகளை வழங்கினார்.