சேலம் செவ்வாய்பேட்டை போலீசார் கடந்த மாதம் 27-ந்தேதி ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி நின்ற சிலரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் சேலம், வீரபாண்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, சேலம் பெரியார் நகரை சேர்ந்த தட்சணாமூர்த்தி, அர்ஜுனன், அஸ்தம்பட்டியை சேர்ந்த ரமேஷ் என்பது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் அறுவை சிகிச்சையின் போது வலி தெரியாமல் இருக்க பயன்படுத்தப்படும் மாத்திரைகளை அதிகமாக வாங்கி அதை இளைஞர்களிடம் போதைக்காக விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கோவை சிங்காநல்லூரை சேர்ந்த செல்வராஜ் (வயது 47) என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.